×

கேரள தங்க கடத்தல் வழக்கில் தேடப்படும் ஃபைசல் பரீத் பாஸ்போர்ட் ரத்து!: மத்திய அரசு நடவடிக்கை!!!

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் துபாயில் பதுங்கியுள்ள ஃபைசலின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.  ஃபைசலிடம் துபாய் போலீசாரும் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் தனித்தனியே விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ-வை பொறுத்தமட்டில் இந்த வழக்கு தொடர்பாக சரித், தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னா, ஃபைசல் பரீத், சந்திப் நாயர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

இந்த வழக்கை பொறுத்தவரையில் சரித், ஸ்வப்னா, சந்திப் நாயர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுவிட்டனர். ஆனால் ஃபைசல் மட்டும் துபாயில் இருக்கிறார். துபாயில் உடற்பயிற்சி கூடம் நடத்திவரும் அவர், ஆடம்பர கார் விற்பனையிலும் ஈடுபட்டிருப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இவர் துபாயில் இருந்து டிப்ளமேடிக் சேனல் வழியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக துணை தூதரகத்தில் உள்ள அதிகாரிக்கு தங்க கட்டியை அனுப்பியதாக கூறப்படுகிறது. எனவே ஃபைசலை பிடிக்கவேண்டிய கட்டாயம் புலனாய்வு பிரிவு  அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஃபைசலை கைது செய்வதற்காக துபாய் போலீசாரின் உதவியை நாடியிருந்தனர். அதோடுமட்டுமின்றி வெளிநாட்டில் ஃபைசல் பரீத் இருப்பதால் அவரை பிடிப்பதற்காக இன்டெர் போல் உதவியும் நாடப்பட்டுள்ளது.  

ஃபைசலை  கைது செய்வதற்கான கட்டாயம் தொடர்ந்து ஏற்பட்டு வருவதன் காரணமாக அவர் வேறு நாடுகளுக்கு தப்பிவிடாமல் இருப்பதற்காக அவருடைய பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்திருக்கிறது. ஃபைசல் உடைய பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டிருக்கும் தகவல் உள்துறை அமைச்சகம், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் ரத்தானத்தை அடுத்து ஃபைசலிடம் துபாய் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவர் எங்கும் சென்றுவிடாதபடி முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் துபாய் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். எவ்வளவு நாட்களாக இந்த தங்க கடத்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அதன் மூலம் கைமாறிய பணம் எவ்வளவு, தீவிரவாத அமைப்புகளுக்கு எந்த வகையில் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிப்பதில் தான் தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து அடுத்த கட்டமாக ஃபைசல் பரீத்தை கைது செய்யவேண்டிய நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Faisal Pareed ,Kerala ,government ,Central ,Faisal Fareed , Kerala gold smuggling case: Faisal Fareed's passport impounded
× RELATED கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு,...